Sunday, May 2, 2010

குடிச்சிட்டு லாரி ஓட்டிய நாய்

சென்னை ரெட் ஹில்ஸ்லருந்து அம்பத்தூர் வரைக்கும் ஒரு லாரி ட்ரைவர் குடிச்சிட்டு 10 கிமீ தூரம் லாரி ஓட்டிட்டு வந்திருக்கான். வர்ர வழியெல்லாம் ஆளுங்க மேல வண்டிய ஏத்தியிருக்கான் மொத்தம் 15 பேர் மேல வண்டிய ஏத்தியிருக்கான், இதுல ஒருத்தர் பலியாகியிருக்கார் அவருக்கு 37 வயசுதான் அகுதாம். அவரோட மனைவி குழந்தைகளோட நிலமைய நினச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு. இது போல குடிச்சிட்டு வண்டி ஓட்ற நாய்கள என்ன பண்ணலாம்?

சும்மா பைக்ல போறவங்கள குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு செக் பண்றாங்க போலீஸ்காரங்க ஆனா TASMAC (Wine Shop) க்கு குடிக்க வர்ரவங்க நடந்தா வர்ராங்க? பைக்ல, லாரில, வேன்ல வந்து தான் குடிக்கிறாங்க. ஒரு நாள் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு வந்த ட்ரைவர் பஸ்ஸ TASMAC பக்கத்துல நிறுத்திட்டு குடிச்சிட்டு போனான். அந்த பஸ்ல போற குழந்தைகள நினச்சி பாத்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொன்னா அவங்களுக்கு வருமானம் கிடைக்குமே ஒழிய நமக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். அப்படி பண்ணா வியாபாரம் பாதிக்குமே...என்ன செய்றது ஒன்னும் புரியல.

Sunday, April 25, 2010

மக்கள் உயிரை வாங்கும் லஞ்சம்

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்ல் இருந்து 1800 கோடி ரூபா லஞ்ச பணமும் 1500 கிலோ தங்கமும் சிபிஐ அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க. மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க permission கொடுக்கிறதுக்கு லஞ்சம் வாங்கியிருக்கான். நம்ம வாழ்நாள்ல ஒரு கோடி ரூபாய கண்ணால பாக்க முடியுமான்னு தெரியல. 1800 கோடி ரூபாய்.... ஒரு கோடிக்கு எத்தனை சைபர் 10000000 சரியா? அப்ப 18000000000 ரூபாய். 1500 கிலோ தங்கம், 1 கிராம் 1500 ரூபாய்ன்னா 1 கிலோ... 1500000 ரூபாய்... 1500 கிலோ 2250000000 ரூபாய். தல சுத்துது. ரொக்கமாவே இவ்வளவு பணத்தையும், தங்கத்தையும் வச்சிருக்கான் லஞ்சத்துல வாங்குன சொத்து எவ்வளவு இருக்கோ...

இது மாதிரி லஞ்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சவனுங்க மெரிட்லயா சீட்டு தருவானுங்க? பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா? இது மாதிரி டாக்டரா ஆறவனுங்க என்ன பண்ணுவானுஙக.... படிக்க குடுத்த பணத்த நம்ம கிட்டருந்து புடுங்றதோட நம்ம உயிரையும் சேத்து எடுப்பானுங்க. எப்படியும் இந்த சமுகத்தில நடக்குற எல்லா தப்புலயும் கடசில ஆப்பு நமக்கு தான்.

என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க...கொஞ்ச நாளா எனக்கு acidity ப்ராப்ளம் இருந்தது. போன மாசம் ஒரு டாக்டர பாத்தேன். என்னோட ப்ராப்ளத்த கேட்ட அந்த டாக்டர் என்ன தொட்டு கூட பாக்கலீங்க... எந்த மருந்தும் எழுதல நாளக்கி காலைல எதுவும் சாப்பிடாம வாங்க endoscope செஞ்சி பாத்துடலாம்னு மட்டும் சொன்னாரு. மொத்தமா அந்த ரூம்ல ஒரு நிமிஷம் கூட இருந்திருக்க மாட்டேன். வெறும endoscope செஞ்சி பாத்துடலாம்னு சொன்னதுக்கு 500 ரூபாய் fees வாங்கிட்டாரு. ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளி நம்ம செருப்ப தெச்சி குடுத்திட்டு 5 ரூபா கேட்டா தெச்ச செருப்ப நாலு தடவ இழுத்து பாத்துட்டு தான் 5 ரூபா கொடுப்போம்... அந்த 5 ரூபா குடுக்கிறதுக்கே மறுபடியும் அறுந்துடாதே... அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேப்போம் ஆனா டாக்டர்ங்க கிட்ட... அவங்க சரியான ட்ரீட்மெண்ட் தந்தாங்களா இல்லாயா... நியாயமான fees கேக்குறாங்களான்னு பாக்காம பணத்த கொடுக்கிறோம்

சரி விஷயத்துக்கு வர்ரேன் இவ்வளவு லஞசம் வாங்கின ஆள என்ன பண்ணலாம்? அந்நியன் படத்துல சொன்ன மாதிரி ஒரு ரூம்ல அவனையும் அந்த 1800 கோடி ரூபாயையும், 1500 கிலோ தங்கத்தையும் வச்சி பூட்டிடனும். அவன் அந்த பணத்தையும், தங்கத்தையும் தின்னுட்டு சாவனும்.

Wednesday, April 7, 2010

போலி மருந்து


காலாவதி ஆன மருந்து மற்றும் போலி மருந்து மூலம் கோடி கோடியா சம்பாரிச்ச கும்பல் ஒன்னு இப்ப போலிஸ்ல மாட்டி இருக்கு. போலிஸ்ல மாட்டின மீனாட்சி சுந்தரம் 20 வருஷமா இந்த வேலை செய்துட்டு வந்ததா சொல்றான்... இப்ப எப்படி மாட்டினானுங்கன்னு புரியல (தர வேண்டியத தரலையோ என்னவோ). மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிங்க எல்லாம் என்ன *** ###கிட்டு இருந்தாங்கன்னு தெரியல. நம்ம வரி பணத்தையெல்லாம் சம்பளமா குடுத்து இது போல தப்பு நடக்காம பாத்துக்க சொன்னா... போலி மருந்து பத்தி நாம எதாவது தகவல் கொடுத்தா சன்மானம் தரேன்னு சொல்றானுங்க மானங்கெட்டவனுங்க. நாம வாங்குற மருந்து போலியா ஒரிஜனாலான்னு நமக்கு பாக்க தெரிஞ்சா இவனுங்க எதுக்கு.

படிக்காத ஆட்கள் medical shop ல கொடுக்கிற மருந்த எதுவுமே பாக்காம வாங்கிட்டு போகும் போது... நான் என்னவோ பெரிசா படிச்ச பருப்பு போல Expiry date எல்லாம் பாத்து வாங்குவேன். ஆனா பழைய மருந்துக்கு புது லேபில் ஒட்டி ஏமாத்துவானுங்கன்னு நினைச்சுகூட பாக்கலை... மனுசங்க உயிரோட விளையாடுற போலி மருந்து கும்பலை மட்டும் கைது பண்ணா போதாது, கடமையை சரியா செய்யாத மற்றும் இதுக்கு துணையா இருந்த அதிகாரிகளையும் விடக்கூடாது.

Thursday, April 1, 2010

நாய் ஒன்னுக்கு போகும்போது...



நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம்
பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன்.
அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...

(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)

Saturday, March 20, 2010

பொண்ண பெத்தவன்

”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”

”அப்படியா...ரொம்ப சந்தோஷம்டா...”

”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”

”டேய் நீ ராஜா டா...”

”என்ன சொல்ற...?”

”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”

”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...?”

”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”

”குழப்புறீயே...”

”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”

”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”

”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா...? மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...?”

”டேய் என்னடா சொல்றே...”

”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”

”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”

Tuesday, March 16, 2010

நித்தியானந்தர் – ஓர் அனுபவம்

நித்தியானந்தரை பற்றிய என்னுடைய முந்திய பதிவை எழுதிய பின் மனதில் ஒரு சிறு நெருடல், சுமை, ம் … ஏதோ ஒன்று. காரணம், நித்தியானந்தரை பின் பற்ற ஆரம்பித்தவர்களில் (நல்ல வேளை இரண்டு மாதமாகத்தான்) நானும் ஒருவன். தற்ச்சமயம் எல்லோரும் அவரை பற்றியே எழுதுவதால், அவரை பற்றி எழுதுவதற்க்கு தயக்கமாக இருந்தது அதையும் மீறி எழுதிவிட்டேன். சரி விஷயத்திற்க்கு வருவோம்.

இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.

என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.

கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.

2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).

3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).

4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.

5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

Monday, March 15, 2010

நித்யானந்தரின் திறமை

எந்த தடயமும் இல்லாமல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை, குற்றவாளி யார் என்றும், அவன் எங்கிருக்கிறான் என்றும் இரண்டே நாட்களில் கண்டு பிடிக்கும் நம்ம ஊர் போலீஸார் இன்னும் நித்யானந்தரை ஏன் தேடி கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரும் ஏதோ ஒர் இடத்தில் இருந்து கொண்டு வீடியோ வேறு எடுத்து அனுப்பி கொண்டு இருகிறார். 15 நாளா என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல்ல. ஒரு வேளை அவரை ரகசியமா கண்காணிக்கிறார்களோ..., போலீஸாருக்கே தண்ணி காட்டும் அளவுக்கு அவர் திறமையானவரா... இல்லை ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கிறதா... இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாமும் வேறு ஏதாவது வீடியோ வருமான்னு கம்ப்யூட்டரை பாத்துகிட்டிருக்கோம்.(கோவிச்சுக்க வேண்டாம் என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).