Friday, March 12, 2010

சொல்ல மறந்த விஷயம்



தாய்ப்பாசம் பற்றி நிறைய படித்திருக்கிறோம்...பேசியிருக்கிறோம்...மற்றவர் பேச கேட்டும் இருக்கிறோம் ஆனால் தந்தையின் பாசத்தை பற்றி...

தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் பாசத்திற்க்கு இணையாக தந்தையும் தன் பிள்ளை மீது பாசம் வைத்திருக்கிறான் ஆனால் அது சில காரணங்களால் வெளியே தெரிவதில்லை. ஆண் பெண் இருவரிலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் அவர்களை விட்டு விடுவோம். பொதுவாக மனைவி கருவை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த காலம் முதல் குழந்தையை நெஞ்சில் சுமக்க தொடங்குகிறான் தந்தை. மகனாக இருந்தால் அவன் படித்து நிலையான வேலையில் அமரும் வரையிலும், மகளாக இருந்தால் அவளை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான்.

தாய்ப்பாசத்தில் சிறிதேனும் எதிர்பார்ப்பு மறைந்திருக்க வாய்ப்புள்ளது. மகனாக இருந்தால்... அவன் திருமணத்திற்க்கு பின்னும் தனக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாயிடம் இருக்கிறது அதன் எதிரொலி தான் மாமியார் மருமகள் சண்டை. மகளாக இருந்தால்... திருமணம் ஆன பிறகும் நான் உன்னை செல்லமாக அப்படி வள்ர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று சொல்லியே தனக்கு முக்கியத்துவம் தருமாரு செய்வது இதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் தந்தையின் பாசம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. மகனோ, மகளோ இந்த சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையோடும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கம் அதற்க்கான உழைப்பு மற்றும் வழிகாட்டல் இவை தான் தந்தை பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதனால் தான் தந்தையின் பாசம் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை பேசப்படுவதும் இல்லை.

ஒர் ஆண் தன் குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் வைத்திருக்கும் பாசம் அவனது பேச்சில் வெளிப்படுவதில்லை அது வெளிப்படும் விதமே வேறு. ஆண் தன் குடும்பதிற்க்காகவும், பிள்ளையின் படிப்பிற்க்காகவும் எத்தனையோ அவமானங்களை வேலை செய்யும் இடங்களில் தாங்கி கொண்டு வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். கணவன் சாதாரணமாக ஏதாவது திட்டினால் கூட சில பெண்கள் முகத்தை தூக்கி வைத்து கொள்வார்கள் அல்லது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார்கள் ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஆண்கள் எத்தனையோ திட்டுகளை தாங்கி கொண்டும் உயர் அதிகாரிகளுக்கு பயந்து கொண்டும் வேலை செய்கிறார்கள் என்பது சக ஆண்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. தன்னை விட வயதில் குறைந்த முதலாளியோ அல்லது உயர் அதிகாரியோ காரணமில்லாமல் திட்டும் திட்டுக்களையும் பொறுத்து கொள்கிறானே யாருக்காக...தனி மனிதனாக இருந்தால்.. “போய்யா நீயும் உன் வேலையும்” என்று வந்து விடுவான் ஆனால்...தன்னை நம்பி குடும்பம், பிள்ளை இருக்கிறதே என்று நினைத்து எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருக்கிறானே அது பாசத்தின் வெளிப்பாடுதான்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரம் அவர்கள் இருவருக்குமே அது புரியாமல் இருக்கும் நிலையும் உண்டு. ஆனால் சில இக்கட்டான நேரங்களில்... என் மகன் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது என்று தந்தையும், என் தந்தை அருகில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மகனும் நினைக்கும் போது சிந்தும் ஒரு துளி கண்ணீர் மூலமாக அந்த பாசம் வெளிப்படும்.

தாய்ப்பாசம் கரையோர கடலலை போல் ஆர்ப்பரிக்கும். தந்தையின் பாசமோ நடுக்கடலை போல் அமைதியானது ஆனால் ஆழமானது.

(ஏதோ மனதில் பட்டதை எழுதிவிட்டேன். அம்மா செல்லங்கள் எத்தனை பேர் என்னை திட்டுவார்களோ...)

9 comments:

  1. இதுவும் கரெக்டுதான்

    ReplyDelete
  2. கருத்திற்க்கு நன்றி...திரு. அண்ணமலையான்

    ReplyDelete
  3. உங்கள் கருத்திற்க்கு நன்றி...திரு. ஷர்புதீன்

    ReplyDelete
  4. //தாய்ப்பாசம் கரையோர கடலலை போல் ஆர்ப்பரிக்கும். தந்தையின் பாசமோ நடுக்கடலை போல் அமைதியானது ஆனால் ஆழமானது//

    அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. சென்சிடிவான விஷயத்தை பற்றி எழுதி விட்டேனோ என்று யோசித்து கொண்டிருந்தேன் கருத்திற்க்கு நன்றி திரு.யோகன்.

    ReplyDelete
  6. இந்த ப்லோக்ல ஏழுதரவிங்க எல்லாம் பாசகாற பசங்களா இருக்காங்க.

    ReplyDelete
  7. வாங்க கைப்புள்ள, என்னை தினமும் சிரிக்க வைத்து சந்தோஷப் படுத்தும் என் தலைவனே என் பதிவிற்க்கு கருத்து அனுப்பியது போல் உள்ளது. நன்றி, அடிக்கடி வரனும்.

    ReplyDelete
  8. உண்மை தான். அப்பாவின் பாசம் தாயின் பாசத்துக்கு நிகரானது. ஆனாலும், இந்த காலத்தில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போவதால், நேரமில்லை, இல்லேன்னா ஆண் என்றால் வெளியே பாசம் காட்டமாட்டான் என்று விதண்டாவாதம் பண்ணாமல், இரண்டு நிமிடங்கள் பிள்ளைகளுடன் செலவு செய்தால்,அவர்களுக்கு புரிய வைக்கலாம். படிச்சிட்டிருக்கும் போது தோளில் தட்டி கொடுப்பது / தலையை வருடிவிட்டு செல்வது போல் சின்ன சின்ன செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம். சாப்பாட்டு மேசையில், அப்பா பரிமாறலாம். ஒரே ஒரு நிமிடம் ட்ரெஸ் பண்ணிட்டு வரும் போது, அடே அழகா இருக்கே என்று பார்த்து சொல்வது. இதெல்லாம் எங்கள் வீட்டில் பார்த்தது. எங்களை சந்தோசப்படுத்தியவை. அதனால் இங்கே சொல்கிறேன். ஆனாலும், உணர்ந்து செய்யுங்கள். ஏனோ தானோ என்று கடனே என்று செய்யாதீர்கள். நவ் நவ், எனக்கு எழுத ஒரு டாப்பிக் கிடைச்சிடுச்சு. யாகூ..

    ReplyDelete
  9. வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி அனாமிகா துவாரகன். //உணர்ந்து செய்யுங்கள். ஏனோ தானோ என்று கடனே என்று செய்யாதீர்கள்//
    பிள்ளைகளிடம் நடிக்க முடியாது கண்டுப் பிடித்துவிடுவார்கள் என்பது என் கருத்து.

    ReplyDelete

Leave your comments