Wednesday, July 21, 2010

முன்னாள் உலக அழகியும் பிரபல இயக்குனரும்

”அம்மா... உங்க கிட்ட கதை சொல்லனும்னு ஒரு டைரக்டர் வந்திருக்காரும்மா...” - அந்த முன்னால் உலக அழகியின் வேலைக்காரன் பவ்வியமாக சொன்னான்.

“எந்த டைரக்டர்... என்ன பேர் சொன்னாரு...”

“காலைலயிருந்து 10 மிஸ்டு கால் கொடுத்திட்டு உங்க போனுக்காக காத்திட்டு இருந்தாராம்”.

”ஓ... அவரா.. அந்த ஆளுக்கு வேர வேலயில்ல அவரு கொழந்தயா இருக்கும் போது அவங்க பாட்டி சொன்ன கதைய எல்லாம் இப்ப படமா எடுத்திட்டு இருக்காரு... அம்மா அடுப்பாங்கரையிலே வேலயாயிருக்காங்க அப்புறமா வாங்கன்னு சொல்லுறதுதானே...”

”சொன்னேம்மா...அடுப்பாங்கரைக்கே வரேன்னாரு அதான் வராண்டவுல உக்கார வச்சிட்டு வந்திருக்கேன்.”

“சரி வர்ரேன்னு சொல்லு”

”வணக்கம் சார் என்ன வ்ஷயம்”

"ஒரு சூப்பரான கதை வ்ச்சிருக்கேன்... உன் கிட்ட சொல்லி ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்...உங்க வீட்டுகாரர் தான் ஹீரோ.”

[ஐயோ... மறுபடியும் நாங்க மாட்னோமா...]

கதையில ஹீரோயின்... அதாவது நீங்க ராஜஸ்த்தான்ல ஒட்டக வியபாரியோட பொண்னா வரீங்க... ஷூட்டிங் முழுக்க முழுக்க பாலைவனத்துல தான் நடக்குது... நாம ஒரு வருஷம் பாலைவனத்துல டெண்ட் போட்டு அங்கேயே தங்குறோம்.

[போச்சு... என்ன ஒரு வழி பண்ணாம இந்த ஆள் விடமாட்டான் போலயிருக்கு... ]

ஹீரோ... அதான் உங்க வீட்டுகாரர் ராஜஸ்த்தான்ல ஒட்டக மேய்ச்சிட்டு இருக்காரு...உங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துறது... உங்க வீட்லயும் சம்மதிச்சு ஒரு ஜோடி ஒட்டகத்த சீதனமா குடுத்து உங்கப்பா கல்யாணம் பண்ணி வக்கீராரு.

அப்படியே கொஞச நாள் உங்க லைப் ஜாலியா போயிட்டு இருக்கு...

ஒட்டகம் மேய்க்க போன உங்க வீட்டுகாரர் அங்க ஒட்டகம் மேய்க்க வந்த ஒருத்தியோடு சேந்து அவளோடவே செட்டில் ஆயிடுராரு....”இந்த ஒட்டகம் மேய்க்கரவ ரோலுக்கு

ஷாகிராவ போடலாம்னு இருக்கேன்...”


[மவனே உனக்கு நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன்... பெரிய எடத்துல எல்லாம் கைவககிற.]

இப்படியே அவங்க ஒன்னா ஒட்டகம் மேய்ச்சிட்டு ஜாலியா இருக்க சொல்ல....ஃபுட் பால் மேட்ச்ல டேன்ஸ் ஆடுறதுக்கு சான்ஸ் கிடைக்கவே உங்க வீட்டுகார்ர டீல்ல விட்டுட்டு அந்தம்மா சவுத் ஆப்ரிக்கா போயிடுறாங்க.

திருந்தி வந்த உங்க வீட்டுகார்ர நீங்களும் மன்னிச்சி ஏத்துகிட்டு... புதுசா ஏதாவது வியாபாரம் பாக்கலாம்னு உங்க கிட்ட இருக்கிற ரெண்டு ஒட்டகத்தில ஆம்பிள ஒட்டகத்தை வித்துட்டு வர சொல்லி உங்க வீட்டுகார்ர அனுப்பிறீங்க...

ஒட்டகம் விக்க போனவர... ராஜாவோட ஒட்டகத்தை திருடிட்டாருன்னு சொல்லி அவருக்கு மரண தண்டனை கொடுத்திர்றாங்க. விஷயம் கேள்விப்பட்டு நீங்க உங்க கிட்ட இருக்கிற பொம்பள ஒட்டகத்த கூட்டிட்டு அரண்மனைக்கு நியாயம் கேக்க போறீங்க

ராஜாகிட்ட அந்த ஆண் ஒட்டகம் உங்களோடது தான்னும் அதோட ஜோடி இதான்னும் வாதாடுறீங்க... ”ராஜா வேஷத்துக்கு உங்க மாமனார்கிட்ட நீங்கதான் கால்ஷீட் வாங்கி தரனும்.”

[இது வேறயா...மொதல்ல இந்த ஆள் கண்ல படாம எங்கயாவது போகனும்]

ராஜாவும் அவர்கிட்டயும் ஒரு பெண் ஒட்டகம் இருக்குன்னும் அதான் அந்த ஆண் ஒட்டகத்தோட ஜோடின்னும் சொல்றாரு.

மந்திரிங்க எல்லாம் ஒன்னா சேந்து ஒரு ஐடியா தராங்க.... அதாவது ரெண்டு பொம்பள ஒட்டகத்தையும் தூர தூர நிக்க வைக்கனும்.... எந்த ஒட்டகத்து கிட்ட ஆம்பிள ஒட்டகம் போகுதோ அதான் அதோட ஜோடின்னு முடிவு ப்ண்றாங்க.

ஆண் ஒட்டகம் உங்களோட பொம்பள ஒட்டகத்து கிட்ட வரவே நீங்க ரொம்ப கோபமாகி சாபம் விட்டு அந்த பாலைவனத்தையே சுனாமியால அழிச்சிறீங்க.

[பாலைவனத்துல சுனாமியா.... அடப்பாவி மனுஷா...]

கதைல ட்விஸ்ட் என்னன்னா.... உங்க வீட்டுகாரர் சரக்கடிகிறதுக்காக அவர் கொண்டு போன ஒட்டகத்தை வித்துட்டு ராஜாவோட ஒட்டகத்த திருடிட்டுதான் வந்திருப்பாரு இத நாம் ஃப்ளாஷ் பேக்ல காட்றோம். அப்புறம் ஏன் அந்த ஆண் ஒட்டகம் உங்க ஒட்டகத்து கிட்ட வந்ததுன்னு கேக்குறீங்களா...

[நான் எதுவும் கேக்குற மாதிரியில்ல]

ஒரே ஜோடியோட இருக்கிறது அதுக்கு போரடிக்கவே தான் அது உங்க ஒட்டகத்து கிட்ட வந்தது. இந்த உண்மை அந்த மூனு ஒட்டகத்துக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த படத்தை நான் ஹிந்தி தமிழ் ரெண்டுலயும் ஒரே நேரத்துல எடுக்கிறேன்.... படத்தோட டைட்டில் என்னன்னு கேக்கலியே.... தமிழ்ல ”கோவலன்” ஹிந்தியில ”கோவன்” இன்ஃபேக்ட் ஒரு சீன்ல ஹீரோ வெறும் கோவனத்தோட நடிக்கனும்.

”கிழிஞ்சது...”

”இல்ல புதுசுதான்”

அப்ப நான் கிளம்புறேன்.... உங்க வீட்டுகாரர் கிட்டயும் ஒரு வருஷத்துக்கு கால்ஷீட் வாங்கி வச்சிடுங்கோ. பை....

”ஹலோ...டார்லிங் அந்த டைரக்டர் டார்ச்சர் தாங்க முடியல....எங்கயாவது வெளிநாட்ல ஒரு வருஷம் இருந்துட்டு வரும்போது புள்ள பெத்துட்டு வரலம்னு சொன்னீங்களே எப்ப போலாம்...

Sunday, June 27, 2010

கல்யாண ரிசப்ஷன்

கல்யாண ரிப்னுக்கு சீக்கிரமா போனா ஒரு அனுபவம், லேட்டா போனா வேற அனுபவம். போன வாரம் தொடர்ந்தாப்போல ரெண்டு கல்யாண ரிப்ஷனுக்கு போக வேண்டியிருந்தது. மொத நாள் கல்யாண ரிப்னுக்கு குடும்பத்தோட மாலை 7 மணிக்கெல்லாம் ரிப்னுக்கு போயிட்டேன் மாப்பிள்ளையும் பொண்ணும் லேட்டா வந்ததால அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்னிசை என்ற பேர்ல காதை செவிடாக்கி கொண்டிருந்தார்கள்.
மாப்பிள்ளையும் பொண்ணும் வந்த பிறகு அவங்களை வாழ்த்துறதுக்கு ஒரு பெரிய க்யுல நின்னு அவங்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா அங்கேயும் ஒரு க்யு. சரி வெய்ட் பண்ணி இடத்த பிடிச்சி சாப்பிட உட்கார்ந்தா அடுத்த பந்திக்கு காத்திருக்கிற ஆள் என் சேருக்கு பின்னே நின்னுட்டு எப்ப எழுந்திருப்பேன்னு நான் சாப்பிடறதயே பாத்திட்டு இருக்காரு. வேகமா சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்து வந்தேன் இல்லேன்னா பின்னாடி நின்னு பாத்திட்டுருந்த ஆள் சாப்பிட்டது போதும் சீக்கிரம் எழுந்துருங்கன்னு சொன்னாலும் சொல்லியிருப்பார்.

சீக்கிரமா போனா இப்படி இருக்கேன்னு மறு நாள் போன
கல்யாண ரிப்னுக்கு லேட்டா 9 மணிக்கு போனேன். கூட்டம் இல்லாமல் இருந்தது, எப்படி என் புத்திசாலிதனம்னு பொண்டாட்டிய ஒரு பார்வை பாத்திட்டு ரிலாக்ஸ்டா மணமக்களை வாழ்த்திட்டு சாப்பிட போனா வெறும் சாம்பார் சாதமும் தயிர் சாதம் மட்டும் இருந்தது மற்ற அயிட்ட்மெல்லாம் காலியாயிடுச்சாம். என் பொண்டாட்டி என்ன ஒரு பார்வை பாத்தா பாருங்க.... இப்பல்லாம் கல்யாண ரிப்னுக்கு போகிறதுக்கு ரொம்ப டென்ஷனாயிருக்கு.

Sunday, May 2, 2010

குடிச்சிட்டு லாரி ஓட்டிய நாய்

சென்னை ரெட் ஹில்ஸ்லருந்து அம்பத்தூர் வரைக்கும் ஒரு லாரி ட்ரைவர் குடிச்சிட்டு 10 கிமீ தூரம் லாரி ஓட்டிட்டு வந்திருக்கான். வர்ர வழியெல்லாம் ஆளுங்க மேல வண்டிய ஏத்தியிருக்கான் மொத்தம் 15 பேர் மேல வண்டிய ஏத்தியிருக்கான், இதுல ஒருத்தர் பலியாகியிருக்கார் அவருக்கு 37 வயசுதான் அகுதாம். அவரோட மனைவி குழந்தைகளோட நிலமைய நினச்சா ரொம்ப கஷ்டமாயிருக்கு. இது போல குடிச்சிட்டு வண்டி ஓட்ற நாய்கள என்ன பண்ணலாம்?

சும்மா பைக்ல போறவங்கள குடிச்சிட்டு வண்டி ஓட்றாங்களான்னு செக் பண்றாங்க போலீஸ்காரங்க ஆனா TASMAC (Wine Shop) க்கு குடிக்க வர்ரவங்க நடந்தா வர்ராங்க? பைக்ல, லாரில, வேன்ல வந்து தான் குடிக்கிறாங்க. ஒரு நாள் ஸ்கூல் பஸ் ஓட்டிட்டு வந்த ட்ரைவர் பஸ்ஸ TASMAC பக்கத்துல நிறுத்திட்டு குடிச்சிட்டு போனான். அந்த பஸ்ல போற குழந்தைகள நினச்சி பாத்தா பயமா இருக்கு. போலீஸ்ல சொன்னா அவங்களுக்கு வருமானம் கிடைக்குமே ஒழிய நமக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நிஜமாவே குடிச்சிட்டு வண்டி ஒட்டுறவங்கள பிடிக்கனும்னா TASMAC பக்கத்துல போலீஸ்காரங்க நின்னு செக் பண்ணனும். அப்படி பண்ணா வியாபாரம் பாதிக்குமே...என்ன செய்றது ஒன்னும் புரியல.

Sunday, April 25, 2010

மக்கள் உயிரை வாங்கும் லஞ்சம்

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்ல் இருந்து 1800 கோடி ரூபா லஞ்ச பணமும் 1500 கிலோ தங்கமும் சிபிஐ அதிகாரிங்க பறிமுதல் செஞ்சிருக்காங்க. மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க permission கொடுக்கிறதுக்கு லஞ்சம் வாங்கியிருக்கான். நம்ம வாழ்நாள்ல ஒரு கோடி ரூபாய கண்ணால பாக்க முடியுமான்னு தெரியல. 1800 கோடி ரூபாய்.... ஒரு கோடிக்கு எத்தனை சைபர் 10000000 சரியா? அப்ப 18000000000 ரூபாய். 1500 கிலோ தங்கம், 1 கிராம் 1500 ரூபாய்ன்னா 1 கிலோ... 1500000 ரூபாய்... 1500 கிலோ 2250000000 ரூபாய். தல சுத்துது. ரொக்கமாவே இவ்வளவு பணத்தையும், தங்கத்தையும் வச்சிருக்கான் லஞ்சத்துல வாங்குன சொத்து எவ்வளவு இருக்கோ...

இது மாதிரி லஞ்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சவனுங்க மெரிட்லயா சீட்டு தருவானுங்க? பணத்தை வாங்கிட்டு தகுதி இல்லாதவனுக்கெல்லாம் சீட்டு தருவானுங்க. பணத்த குடுத்து சீட்டு வாங்கிறவனுக்கு எப்படி பாஸ் பண்ணனும்னு தெரியாதா? இது மாதிரி டாக்டரா ஆறவனுங்க என்ன பண்ணுவானுஙக.... படிக்க குடுத்த பணத்த நம்ம கிட்டருந்து புடுங்றதோட நம்ம உயிரையும் சேத்து எடுப்பானுங்க. எப்படியும் இந்த சமுகத்தில நடக்குற எல்லா தப்புலயும் கடசில ஆப்பு நமக்கு தான்.

என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க...கொஞ்ச நாளா எனக்கு acidity ப்ராப்ளம் இருந்தது. போன மாசம் ஒரு டாக்டர பாத்தேன். என்னோட ப்ராப்ளத்த கேட்ட அந்த டாக்டர் என்ன தொட்டு கூட பாக்கலீங்க... எந்த மருந்தும் எழுதல நாளக்கி காலைல எதுவும் சாப்பிடாம வாங்க endoscope செஞ்சி பாத்துடலாம்னு மட்டும் சொன்னாரு. மொத்தமா அந்த ரூம்ல ஒரு நிமிஷம் கூட இருந்திருக்க மாட்டேன். வெறும endoscope செஞ்சி பாத்துடலாம்னு சொன்னதுக்கு 500 ரூபாய் fees வாங்கிட்டாரு. ஒரு செருப்பு தைக்கிற தொழிலாளி நம்ம செருப்ப தெச்சி குடுத்திட்டு 5 ரூபா கேட்டா தெச்ச செருப்ப நாலு தடவ இழுத்து பாத்துட்டு தான் 5 ரூபா கொடுப்போம்... அந்த 5 ரூபா குடுக்கிறதுக்கே மறுபடியும் அறுந்துடாதே... அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி கேப்போம் ஆனா டாக்டர்ங்க கிட்ட... அவங்க சரியான ட்ரீட்மெண்ட் தந்தாங்களா இல்லாயா... நியாயமான fees கேக்குறாங்களான்னு பாக்காம பணத்த கொடுக்கிறோம்

சரி விஷயத்துக்கு வர்ரேன் இவ்வளவு லஞசம் வாங்கின ஆள என்ன பண்ணலாம்? அந்நியன் படத்துல சொன்ன மாதிரி ஒரு ரூம்ல அவனையும் அந்த 1800 கோடி ரூபாயையும், 1500 கிலோ தங்கத்தையும் வச்சி பூட்டிடனும். அவன் அந்த பணத்தையும், தங்கத்தையும் தின்னுட்டு சாவனும்.

Wednesday, April 7, 2010

போலி மருந்து


காலாவதி ஆன மருந்து மற்றும் போலி மருந்து மூலம் கோடி கோடியா சம்பாரிச்ச கும்பல் ஒன்னு இப்ப போலிஸ்ல மாட்டி இருக்கு. போலிஸ்ல மாட்டின மீனாட்சி சுந்தரம் 20 வருஷமா இந்த வேலை செய்துட்டு வந்ததா சொல்றான்... இப்ப எப்படி மாட்டினானுங்கன்னு புரியல (தர வேண்டியத தரலையோ என்னவோ). மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிங்க எல்லாம் என்ன *** ###கிட்டு இருந்தாங்கன்னு தெரியல. நம்ம வரி பணத்தையெல்லாம் சம்பளமா குடுத்து இது போல தப்பு நடக்காம பாத்துக்க சொன்னா... போலி மருந்து பத்தி நாம எதாவது தகவல் கொடுத்தா சன்மானம் தரேன்னு சொல்றானுங்க மானங்கெட்டவனுங்க. நாம வாங்குற மருந்து போலியா ஒரிஜனாலான்னு நமக்கு பாக்க தெரிஞ்சா இவனுங்க எதுக்கு.

படிக்காத ஆட்கள் medical shop ல கொடுக்கிற மருந்த எதுவுமே பாக்காம வாங்கிட்டு போகும் போது... நான் என்னவோ பெரிசா படிச்ச பருப்பு போல Expiry date எல்லாம் பாத்து வாங்குவேன். ஆனா பழைய மருந்துக்கு புது லேபில் ஒட்டி ஏமாத்துவானுங்கன்னு நினைச்சுகூட பாக்கலை... மனுசங்க உயிரோட விளையாடுற போலி மருந்து கும்பலை மட்டும் கைது பண்ணா போதாது, கடமையை சரியா செய்யாத மற்றும் இதுக்கு துணையா இருந்த அதிகாரிகளையும் விடக்கூடாது.

Thursday, April 1, 2010

நாய் ஒன்னுக்கு போகும்போது...நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம்
பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன்.
அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...

(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)

Saturday, March 20, 2010

பொண்ண பெத்தவன்

”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”

”அப்படியா...ரொம்ப சந்தோஷம்டா...”

”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”

”டேய் நீ ராஜா டா...”

”என்ன சொல்ற...?”

”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”

”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...?”

”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”

”குழப்புறீயே...”

”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”

”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”

”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா...? மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...?”

”டேய் என்னடா சொல்றே...”

”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”

”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”

Tuesday, March 16, 2010

நித்தியானந்தர் – ஓர் அனுபவம்

நித்தியானந்தரை பற்றிய என்னுடைய முந்திய பதிவை எழுதிய பின் மனதில் ஒரு சிறு நெருடல், சுமை, ம் … ஏதோ ஒன்று. காரணம், நித்தியானந்தரை பின் பற்ற ஆரம்பித்தவர்களில் (நல்ல வேளை இரண்டு மாதமாகத்தான்) நானும் ஒருவன். தற்ச்சமயம் எல்லோரும் அவரை பற்றியே எழுதுவதால், அவரை பற்றி எழுதுவதற்க்கு தயக்கமாக இருந்தது அதையும் மீறி எழுதிவிட்டேன். சரி விஷயத்திற்க்கு வருவோம்.

இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.

என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.

கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.

2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).

3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).

4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.

5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

Monday, March 15, 2010

நித்யானந்தரின் திறமை

எந்த தடயமும் இல்லாமல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை, குற்றவாளி யார் என்றும், அவன் எங்கிருக்கிறான் என்றும் இரண்டே நாட்களில் கண்டு பிடிக்கும் நம்ம ஊர் போலீஸார் இன்னும் நித்யானந்தரை ஏன் தேடி கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரும் ஏதோ ஒர் இடத்தில் இருந்து கொண்டு வீடியோ வேறு எடுத்து அனுப்பி கொண்டு இருகிறார். 15 நாளா என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல்ல. ஒரு வேளை அவரை ரகசியமா கண்காணிக்கிறார்களோ..., போலீஸாருக்கே தண்ணி காட்டும் அளவுக்கு அவர் திறமையானவரா... இல்லை ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கிறதா... இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாமும் வேறு ஏதாவது வீடியோ வருமான்னு கம்ப்யூட்டரை பாத்துகிட்டிருக்கோம்.(கோவிச்சுக்க வேண்டாம் என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).

Friday, March 12, 2010

சொல்ல மறந்த விஷயம்தாய்ப்பாசம் பற்றி நிறைய படித்திருக்கிறோம்...பேசியிருக்கிறோம்...மற்றவர் பேச கேட்டும் இருக்கிறோம் ஆனால் தந்தையின் பாசத்தை பற்றி...

தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் பாசத்திற்க்கு இணையாக தந்தையும் தன் பிள்ளை மீது பாசம் வைத்திருக்கிறான் ஆனால் அது சில காரணங்களால் வெளியே தெரிவதில்லை. ஆண் பெண் இருவரிலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் அவர்களை விட்டு விடுவோம். பொதுவாக மனைவி கருவை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த காலம் முதல் குழந்தையை நெஞ்சில் சுமக்க தொடங்குகிறான் தந்தை. மகனாக இருந்தால் அவன் படித்து நிலையான வேலையில் அமரும் வரையிலும், மகளாக இருந்தால் அவளை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான்.

தாய்ப்பாசத்தில் சிறிதேனும் எதிர்பார்ப்பு மறைந்திருக்க வாய்ப்புள்ளது. மகனாக இருந்தால்... அவன் திருமணத்திற்க்கு பின்னும் தனக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாயிடம் இருக்கிறது அதன் எதிரொலி தான் மாமியார் மருமகள் சண்டை. மகளாக இருந்தால்... திருமணம் ஆன பிறகும் நான் உன்னை செல்லமாக அப்படி வள்ர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று சொல்லியே தனக்கு முக்கியத்துவம் தருமாரு செய்வது இதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் தந்தையின் பாசம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. மகனோ, மகளோ இந்த சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையோடும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கம் அதற்க்கான உழைப்பு மற்றும் வழிகாட்டல் இவை தான் தந்தை பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதனால் தான் தந்தையின் பாசம் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை பேசப்படுவதும் இல்லை.

ஒர் ஆண் தன் குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் வைத்திருக்கும் பாசம் அவனது பேச்சில் வெளிப்படுவதில்லை அது வெளிப்படும் விதமே வேறு. ஆண் தன் குடும்பதிற்க்காகவும், பிள்ளையின் படிப்பிற்க்காகவும் எத்தனையோ அவமானங்களை வேலை செய்யும் இடங்களில் தாங்கி கொண்டு வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். கணவன் சாதாரணமாக ஏதாவது திட்டினால் கூட சில பெண்கள் முகத்தை தூக்கி வைத்து கொள்வார்கள் அல்லது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார்கள் ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஆண்கள் எத்தனையோ திட்டுகளை தாங்கி கொண்டும் உயர் அதிகாரிகளுக்கு பயந்து கொண்டும் வேலை செய்கிறார்கள் என்பது சக ஆண்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. தன்னை விட வயதில் குறைந்த முதலாளியோ அல்லது உயர் அதிகாரியோ காரணமில்லாமல் திட்டும் திட்டுக்களையும் பொறுத்து கொள்கிறானே யாருக்காக...தனி மனிதனாக இருந்தால்.. “போய்யா நீயும் உன் வேலையும்” என்று வந்து விடுவான் ஆனால்...தன்னை நம்பி குடும்பம், பிள்ளை இருக்கிறதே என்று நினைத்து எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருக்கிறானே அது பாசத்தின் வெளிப்பாடுதான்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரம் அவர்கள் இருவருக்குமே அது புரியாமல் இருக்கும் நிலையும் உண்டு. ஆனால் சில இக்கட்டான நேரங்களில்... என் மகன் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது என்று தந்தையும், என் தந்தை அருகில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மகனும் நினைக்கும் போது சிந்தும் ஒரு துளி கண்ணீர் மூலமாக அந்த பாசம் வெளிப்படும்.

தாய்ப்பாசம் கரையோர கடலலை போல் ஆர்ப்பரிக்கும். தந்தையின் பாசமோ நடுக்கடலை போல் அமைதியானது ஆனால் ஆழமானது.

(ஏதோ மனதில் பட்டதை எழுதிவிட்டேன். அம்மா செல்லங்கள் எத்தனை பேர் என்னை திட்டுவார்களோ...)

Monday, March 8, 2010

பொறுப்புள்ள அப்பா“டேய்....வாயில விரல வச்சி சூப்பாதன்னு எத்தனை தடவை சொல்றது....வாயில இருந்து விரல எடுடா


“ஏங்க கோவப்படறீங்க...இப்பதானே மூனு வயுசு ஆகுது போகப்போக சரியாயிடும்


“அடியே....விரல் சூப்பினான்னா பல்லு எடுத்தாப்போல வளரும் அப்புறம் வரப்போற மருமகளுக்கு நான் தானே பதில் சொல்லனும்


“என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலியே


“இவனுக்கு கல்யாணம் ஆச்சின்னா வரப்போற என் மருமக என்னை பாத்து கேட்கமாட்டாளா?


“என்ன கேட்பா


“ஏன் மாமா...இவருக்குத்தான் சின்ன வயசுலே விரல் சூப்புற பழக்கம் இருந்ததே நீங்க அந்த பழக்கத்தை நிறுத்தியிருக்க கூடாதா...அதால எனக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க....முத்தா கொடுத்தா பல்லு குத்துது அப்படின்னு சொன்னா நான் என்ன பதில் சொல்றது


“சீப்போங்க...உங்களுக்கு கொஞசம் கூட விவஸ்த்தை கிடையாது


Friday, March 5, 2010

சந்நியாசம்

நிறைய பேர் இப்படித்தான் பொலம்புறாங்க

"மனசே சரியில்லைங்க.... நாடு போற போக்கை பார்த்தா பேசாமே இல்லறத்தை விட்டுட்டு சந்நியாசம் போயிடலாம்னு தோனுது".

Thursday, February 11, 2010

கணவன் மனைவி

மனைவி: நான் ஒரு நியூஸ் பேப்பரா இருந்தா நல்லா இருந்திருக்கும், நாளெல்லாம் உங்க கைல இருந்திருப்பேன்.
கணவன்: ம்ம்...நல்லாத்தான் இருந்திருக்கும், எனக்கும் டெய்லி புதுசு புதுசா பொண்டாட்டி கிடைச்சியிருக்கும்.

--------------
டாக்டர் : உங்க கணவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை, இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி: அவருக்கு எப்ப தரனும்.
டாக்டர்: தூக்க மாத்திரை அவருக்கு இல்லை, உங்களுக்கு.

---------------
கணவன்: இன்னைக்கு சன்டே, நான் என்ஜாய் பண்ணனும் சினிமாக்கு மூணு டிக்கட் எடுத்திருக்கேன்.
மனைவி: நாம ரெண்டு பேர் தானே எதுக்கு மூணு டிக்கட்.
கணவன்: இது உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும்.

-------------
புதுசா கல்யாணமானவன் : பொண்டாட்டியோட பர்த்டேவை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது.
அனுபவஸ்த்தன் : ஒரு தடவை மறந்து பாரு, அப்புறம் ஜன்மத்துக்கும் மறக்க மாட்டே .

Wednesday, February 10, 2010

லேட்டாயிடுச்சி

பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு அசெம்ப்ளி ஷாப்ல 25 பேர் கொண்ட ஒரு குருப்க்கு நான் இன்சார்ஜா இருந்தேன். சாதரணமா லேட்டா வர்றவங்க கிட்டே "ஏங்க லேட்ன்னு" கேட்டா "பஸ் லேட்" இல்ல "உடம்பு சரியில்ல" இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்வாங்க. ஆனா, ஒரு குடும்பஸ்த்தர் மட்டும் "ஏங்க லேட்ன்னு" கேட்டா "கொஞ்சம் லேட்டாயிடுச்சி சார்" ன்னு சொல்வாரு. "என்னங்க, ஏன் லேட்டுன்னு கேட்டா, கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு சொல்றிஙகளே, ஏங்க லேட்" ன்னு மறுபடியும் கேட்டா”அதான் சொல்றேன்ல்ல சார் கொஞ்சம் லேட்டயிடுச்சி” அப்படின்னு சொல்வாரு. கடைசி வரைக்கும் லேட்டா வந்ததுக்கான காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டாரு.

எனக்கு அதோட அர்த்தம் கல்யாணம் ஆன பிறகு தான் புரிய ஆரம்பிச்சது. நானும் இப்பல்லாம் லேட்டா ஆபிஸ் போகும் போது ஏன் லேட்னு பாஸ் கேட்டா இந்த உண்மையான காரணத்தை சொல்ல முடியுமான்னு யோசிக்கிறேன்.

1. 6.30 மணிக்கு அலாரம் அடிக்கும் போது அலாரத்தை ஆப் செய்துட்டு இன்னும் அரை மணி நேரம் துங்குறேனே (இந்த அரை மணி நேரந்தாங்க சொர்க்கம்) அத சொல்ல முடியுமா?

2. எழுந்தப்பறம் 5 நிமிஷம் ஒரு மப்புல உட்கார்ந்து இருக்கிறேனே (இந்த சுகத்தை அனுபவிச்சாத்தான் புரியும்) அத சொல்ல முடியுமா?

3. பொண்டாட்டி கிட்ட காபி கேட்டா, ”இந்த காய கொஞ்சம் நறுக்கி கொடுங்க அதுக்குள்ள காபி கலந்து தரேன்”னு சொல்லி காய் கட் செய்து முடியிற வரைக்கும் காபிய கண்ல காட்டாம லேட் செய்றாளே (யப்பா, இதயெல்லாம் எந்த காலேஜ்ல சொல்லி தராங்கன்னு தெரியல) அத சொல்ல முடியுமா?

4. குளிச்சிட்டு வந்து ட்ரஸ் செய்ய பிரோவை திறந்தா பேண்ட்டுங்க மட்டும் அயர்ன் செய்துயிருக்க ஒரு அயர்ன் செய்த சட்டை கூட இல்லாம அந்த நேரத்துக்கு சட்டை அயர்ன் செஞ்சதை சொல்ல முடியுமா?

5. ட்ரஸ் செஞ்சிட்டு சாக்ஸை தேடினா ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு சாக்ஸ் மட்டும் இருக்க இன்னொரு சாக்ஸை தேட்றதை சொல்ல முடியுமா?

6. சாக்ஸை போட்டுட்டு ஷுவை போடலாம்ன்னு பார்த்தா, ஷுவை என் குட்டி பையன் போட்டுட்டு ஹால் பூரா சுத்திட்டு இருக்க அவன்கிட்ட தாஜா செய்து ஷுவை வாங்கி போட்ற்துக்கு கொஞசம் நேரம் ஆகுமே அத சொல்ல முடியுமா?

7. மொத நாள் சாயங்காலம் பெட்ரோல் போட மறந்து காலைல பெட்ரோல் போட க்யுவுல நின்னேனே அத சொல்ல முடியுமா?

ம்ம்... இப்பதான் புரியுது இப்படி ஒவ்வொரு செயல்லயும் கொஞ்சம் லேட்டாகவே தான் அவர் பொதுவா கொஞ்சம் லேட்டயிடுச்சின்னு உண்மைய சொன்னார்னு.

Tuesday, February 9, 2010

ஆண் மனம்

மீனின் கண்ணீர்
நீருக்குத்தெரியும்
ஆணின் கண்ணீர்
யாருக்குத்தெரியும்

அழுவதற்கும் வழியில்லா
அவல நிலை
இந்த ஆண்களுக்கு

தேக்கி வைத்த சோகம்
நெஞ்சில் சுமையாகும் பொழுது
அவன் அழுவதற்கு
ஆறுதலாய் அமைந்த இடம்
குளியலறை
குளியலறையில்
வழிந்தோடும் நீரில்
கரைந்தோடும் அவன் கண்ணீர்
ஆம்....
பாடல்கள் மட்டுமல்ல
சில நேரம்
ஆண்களின் அழுகையும்
குளியலறையில் அரங்கேறுகிறது.

Friday, February 5, 2010

அங்க எப்படி?

சாப்பிடும் போது எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்பிடனும் என்பது என்னோட விருப்பம். ஆனா எங்க வீட்ல அப்படி நடக்க மாட்டேங்குதுங்க. டைனிங் டேபில்ல சாப்பாடு பரிமாறினதும் எல்லோரும் அவங்க அவங்க தட்ட எடுத்துக்கிட்டு போய் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு டிவி பார்த்துகிட்டே சாப்பிடறாங்க. கோபம் வந்து என்னைக்காவது சத்தம் போட்டா அடுத்த ரெண்டு நாளைக்கு எல்லாம் சரியாய் இருக்குது மூணாவது நாள் மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறின மாதிரி தட்ட தூக்கிட்டு டிவி முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துகிட்டே சாபிடறாங்க . எங்க வீட்ல மட்டும் தான் இப்படி நடக்குதா? இல்ல எல்லோர் வீட்லயும் இப்படி தானா ? இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் சொல்லுங்களேன்.

Wednesday, January 20, 2010

ஆயிரத்தில் ஒருவன்ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சராசரி ரசிகர்களுக்கு புரியாது என்றும் சில அறிவு ஜீவிகளுக்கு மட்டும் தான் புரியும் என்றும் சிலர் தங்களை தாங்களே மேதாவி ஆக்கி கொள்கிறார்கள். மேலும் குமுதம் விமர்சனத்திலும் "ஆயிரத்தில் ஒருவன் சராசரி ரசிகர்களுக்கு புரியாத புதிர்" என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை, சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது என்றால் சரி ஆனால் அது என்ன சராசரி ரசிகர்களுக்கு புரியாது? திரைக்கதை தெளிவில்லாமல் சில இடங்களில் திரைப்படம் பார்ப்பவர்கள் கதையை யூகிக்கும் வண்ணம் திரைப்படம் அமைந்து இருக்கிறது என்பதே உண்மை. ஒரு இயக்குனர் தான் சொல்ல நினைதததை அனைவர்க்கும் புரியும் வண்ணம் சொல்வது அவரது திறமை, அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் அமையவில்லை.Tuesday, January 19, 2010

ராணுவ வீரனின் கவலைசீறிவரும் எதிரியின்
தோட்டாக்களை கண்டு
சிறிதும் பதறியதில்லை
எடுத்து வைக்கும்
அடுத்த அடியின் கீழ்
கண்ணிவெடி இருக்குமோ
என்றும் பதறியதில்லை
ஆனால்....
மருத்துவமனை சென்ற
வயதான என் தாய்
மருந்து வாங்கும் இடம் தேடி
அலைவாளே என்றும்
அண்டை நாட்டு எதிரியை
துச்சமென நினைக்கும்
வீரனின் தங்கை
கல்லூரி செல்லும் வழியில்
கயவர் சீண்ட
நடுங்குவாளே என்றும்
நினைக்கையில் நெஞ்சம்
பதறுகிறது.

Sunday, January 17, 2010

Wife  • My wife and I were happy for twenty years. Then we met (Rodney Dangerfield)


  • A good wife always forgives her husband when she is wrong. (Milton Berle)


  • By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher (Socrates)


  • The great question... which I have not been able to answer... is, "What does a woman want?" (Sigmund Freud)


  • Two secrets to keep your marriage brimming are whenever you're wrong, admit it and whenever you're right, shut up ( Nash )


Friday, January 15, 2010

முதியோர் இல்லம்வயதான பெற்றோரை

முதியோர் இல்லம் சேர்க்க

வழியில் ஒருவரிடம்

விலாசம் விசாரித்தேன்

வலது புறம் திரும்பியதும்

பழைய பேப்பர் கடை வரும்

அதற்கு அருகில் என்றார்...

திரும்பி வந்து விட்டேன் .


நம்பிக்கை ஒலிபார்வையற்ற பிச்சைக்காரர்

தட்டில்

சில்லறை சத்தம்.


நாய்ப்பாசம்குப்பைத்தொட்டியில் குழந்தை

ஆச்சரியத்தோடு பார்த்தது

நாய், தன் குட்டியுடன்.