Saturday, March 20, 2010

பொண்ண பெத்தவன்

”ராஜாராமா... எனக்கு பெண் குழந்தை பொறந்திருக்குடா...”

”அப்படியா...ரொம்ப சந்தோஷம்டா...”

”அட நீ வேற... நானே பொண்ணு பொறந்துடுச்சுன்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன்...”

”டேய் நீ ராஜா டா...”

”என்ன சொல்ற...?”

”ஆமான்டா... பொண்ண பெத்தவன் ராஜாடா... வேணும்னா இன்னொரு பொண்ண பெத்துக்கோ ராஜாதி ராஜாவாயிடுவே.”

”நீ புள்ளய பெத்துட்டு என்ன கிண்டல் பண்றீயா...?”

”கிண்டல் பண்ணலடா... உண்மையத் தான் சொல்றேன்... புள்ளைய பெத்த அப்பா, அம்மா ஏர்போர்ட் வரைக்கும் தான்... ஆனா பொண்ண பெத்த அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா, லண்டன்னு Foreign லாம் போலாம்...”

”குழப்புறீயே...”

”ஒரு பேச்சுக்கு எடுத்துக்குவோம், என் பையனுக்கு இப்ப அஞ்சு வயசு ஆகுது... அவனை இஞ்சினீரிங் படிக்க வைக்கீறேன்னு வச்சுக்குவோம்... இஞ்சினீரிங் படிச்சிட்டு என்ன பண்ணுவான்... MS படிக்க அமெரிக்கா பொறேன்னு சொல்லுவான் நானும் என் சேமிப்பெல்லம் சுரண்டி MS படிக்க அமெரிக்கா அனுப்பி வைப்பேன்... போய்ட்டு திரும்பி இங்க வருவானா... வரமாட்டான்....அங்கேயே ஒரு வேலைய பாத்து செட்டில் ஆயிடுவான். சரி கழுதை எங்கே இருந்தாலும் நல்லா இருந்தா சரின்னு.... உன் பொண்ண என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்...”

”அட இப்பத் தான் குழைந்தை பொறந்திருக்கு அதுக்குள்ள சம்மந்தி ஆக்கிட்டியே...”

”டேய்... நீயோ என் பக்கத்து வீட்டுக்காரன், என் சினேகிதன் வேற... என் பையன் அமெரிக்கால செட்டில் ஆயிட்டான்னா விட்டுறுவியா... விட்டுட்டேன்னு வை நீயும் வேஸ்ட் உன் பொண்ணும் வேஸ்ட். என்ன சொல்லிட்டிருந்தேன்.... ம்... கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்ன்னு வச்சிக்குவோம்... இப்ப உம் பொண்ணு ஈஸியா அமெரிக்கா போயிடுவா... அப்ப வழியனுப்ப நாம எல்லாம் ஏர்போர்ட் போறமே அவ்வளவு தான் எங்களுக்கு. போறவ சும்மா இருப்பாளா...? மூனு மாசம் கழிச்சு நான் மாசமா இருக்கேன் துணைக்கு அம்மாவை இங்க அனுப்பி வையுங்கோன்னு... உன் பொண்டாட்டிய அமெரிக்கா வரச் சொல்லுவா... மாமியார அனுப்பி வையுங்கோன்னு... என் பொண்டாட்டிய வர சொல்லுவாளா என்ன...?”

”டேய் என்னடா சொல்றே...”

”நடக்குறத தான்டா சொல்றேன்...உன் wife ம் ஜம்முன்னு அமெரிக்கா போயிடுவாங்க. இப்ப குழந்தை பொற்ந்திடுச்சின்னு வச்சிக்குவோம். என் பையன் என்ன பண்ணுவான்... குழந்தையோட போட்டாவை எங்களுக்கு அனுப்பிட்டு, அத்தையால தனியா பாத்துக்க முடியல மாமாவை இங்க வர சொல்லுங்கன்னு சொல்லுவான்... உன் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா இருக்க முடியாம உன் பொண்ணு மூலமா இந்த மாதிரி டகால்ட்டி வேலை செய்யாமலா இருப்பே. So இப்ப நீயும் அமெரிக்கா கிளம்பி போயிடுவே... அங்க போய் ஜீன்ஸ், ஜெர்கின்னு போட்டுட்டு கலக்குவே. நாங்க இங்க இருந்துட்டு எந்த முதியோர் இல்லம் வசதியா இருக்கும்னு பேப்பர பார்த்துட்டு இருப்போம். இப்ப புரிஞ்சுதா... பொண்ண பெத்துட்டோம்னு கவலை படாம சந்தோஷமா இரு. கவலைப்பட வேண்டியது புள்ளய பெத்தவஙக தான்.”

”யப்பா... சத்தியமா என் பொண்ண உன் புள்ளைக்கு கட்டி கொடுக்க மாட்டேன்டா.”

Tuesday, March 16, 2010

நித்தியானந்தர் – ஓர் அனுபவம்

நித்தியானந்தரை பற்றிய என்னுடைய முந்திய பதிவை எழுதிய பின் மனதில் ஒரு சிறு நெருடல், சுமை, ம் … ஏதோ ஒன்று. காரணம், நித்தியானந்தரை பின் பற்ற ஆரம்பித்தவர்களில் (நல்ல வேளை இரண்டு மாதமாகத்தான்) நானும் ஒருவன். தற்ச்சமயம் எல்லோரும் அவரை பற்றியே எழுதுவதால், அவரை பற்றி எழுதுவதற்க்கு தயக்கமாக இருந்தது அதையும் மீறி எழுதிவிட்டேன். சரி விஷயத்திற்க்கு வருவோம்.

இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நித்தியானந்தரின் இரண்டு நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டேன். தியான வகுப்பை ஏற்ப்பாடு செய்திருந்த விதமும், அங்கு சேவை செய்தவர்கள் மரியாதையாக நடந்து கொண்ட விதமும், தியான வகுப்பும் நன்றாகத்தான் இருந்தது. அப்போதே பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கும் கல்பதருவிற்க்கான (கல்பதரு என்றால் வேண்டும் வரங்களை அளிப்பது) விளம்பரமும் செய்தார்கள்.

என் அம்மா கேன்சர் நோயால் கஷ்ட்டப்படுவதால் நோயின் வீரியமாவது அவரது ஹீலிங் மூலமாக குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பில், நானும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்பதருக்கு போனோம். பெண்கள் சந்தன கலர் உடையில் தரிசனதிற்கு வந்தால் நல்லது என்று சொன்னதால் (அப்போது தான் சக்தியை ரிசீவ் பண்ண முடியுமாம்). மனைவிக்கு சந்தன கலர் சுடிதாருக்காக முந்தின நாள் இரவு 10 கடைகளுக்கு மேல் தேடி ஒரு சந்தன கலர் சுடிதாரும் எடுத்து வந்தேன். 7 மணிக்குள் அங்கு இருக்க வேண்டும் என்பதால் 5 மணிக்கெல்லாம் தூங்கி கொண்டிருந்த குழந்தையெல்லாம் பாதி தூக்கதில் எழுப்பி ஒரு வித பதட்டத்துடனே கிளம்பி சென்றோம்.

கல்பதரு நிகழ்ச்சியிலும் நித்யானந்தர் மேடைக்கு வரும் வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. என்னவோ தெரியவில்லை அவர் மேடைக்கு வந்த பிறகு அவரை பற்றி அவரது சீடர்கள் பில்ட அப் செய்து வைத்திருந்த அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

1. முதலில் அவர் மேடையில் தோன்றும் போது பின்னனியில் ஒலித்த பாட்டு அதிரவைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஒலித்த அத்தனை பாடல்களும் அவரைப்பற்றியே இருந்தது மேலும் அத்தனையும் குத்து பாடல் வடிவில் இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் மனதை வருடும் சாந்தமான இசையை எதிர்ப்பார்த்தேன் ஏனென்றால் அங்கு வந்திருந்தவர்களில் நிறைய நோயாளிகள் இருந்தார்கள்.

2. அவர் பேசும் போது சில கதைகளை கூறினார் அவை ஏற்கனவே பல புத்தகங்களில் வந்த காமெடி கதைகள் ஆனால் அதை அவர் நேரில் பார்த்தது போல் கூறியதில் சிறிது பொய் கலந்திருந்தது (பட்டி மன்றங்களில் தான் அப்படி பேசுவார்கள்).

3. கல்பதரு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் அந்த நிகழ்ச்சியின் போது யாரும் பேசக்கூடாது என்றும் எந்த சப்தமும் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் கல்பதரு நடந்து கொண்டிருக்கும் போது ஆண்களும் பெண்களும் (தனித்தனியாகத்தான்) ஆடிய ஆட்டமும் அதற்காக போடப்பட்ட குத்து பாடல்களும் காதை கிழித்தது (ஆட்டமும்,பாட்டும் நன்றாக இல்லை).

4. ஆசி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகம் பணம் கொடுத்தவர்களுடன் நிறைய நேரம் பேசினார். எங்களை போன்ற குறைவான பணம் (1000 ரூபாய்) கொடுத்தவர்கள் கூறியதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை அதற்குள் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சீடர்கள் திருப்பதியில் தள்ளி விடுவார்களே அது போல் தள்ளி விட்டு விட்டார்கள்.

5. எல்லாவற்றிற்க்கும் மேல் அவரின் சீடர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கட்டியணைத்து அவர் ஆசி வழங்கிய விதம் சரியில்லை. என்னதான் சாமியாராக இருந்தாலும் பெண்களை கட்டியணைத்து ஆசி வழங்குவது தேவையில்லாதது என்று திரும்பி வரும் போதே நாங்கள் பேசி கொண்டு வந்தோம். இப்போது யோசித்து பார்த்தால் இப்படிப்பட்டவர் எந்த வித விகல்ப்பமும் இல்லாமல் பெண்களை கட்டிப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

Monday, March 15, 2010

நித்யானந்தரின் திறமை

எந்த தடயமும் இல்லாமல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை, குற்றவாளி யார் என்றும், அவன் எங்கிருக்கிறான் என்றும் இரண்டே நாட்களில் கண்டு பிடிக்கும் நம்ம ஊர் போலீஸார் இன்னும் நித்யானந்தரை ஏன் தேடி கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரும் ஏதோ ஒர் இடத்தில் இருந்து கொண்டு வீடியோ வேறு எடுத்து அனுப்பி கொண்டு இருகிறார். 15 நாளா என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல்ல. ஒரு வேளை அவரை ரகசியமா கண்காணிக்கிறார்களோ..., போலீஸாருக்கே தண்ணி காட்டும் அளவுக்கு அவர் திறமையானவரா... இல்லை ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கிறதா... இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாமும் வேறு ஏதாவது வீடியோ வருமான்னு கம்ப்யூட்டரை பாத்துகிட்டிருக்கோம்.(கோவிச்சுக்க வேண்டாம் என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).

Friday, March 12, 2010

சொல்ல மறந்த விஷயம்தாய்ப்பாசம் பற்றி நிறைய படித்திருக்கிறோம்...பேசியிருக்கிறோம்...மற்றவர் பேச கேட்டும் இருக்கிறோம் ஆனால் தந்தையின் பாசத்தை பற்றி...

தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் பாசத்திற்க்கு இணையாக தந்தையும் தன் பிள்ளை மீது பாசம் வைத்திருக்கிறான் ஆனால் அது சில காரணங்களால் வெளியே தெரிவதில்லை. ஆண் பெண் இருவரிலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள் அவர்களை விட்டு விடுவோம். பொதுவாக மனைவி கருவை வயிற்றில் சுமக்க ஆரம்பித்த காலம் முதல் குழந்தையை நெஞ்சில் சுமக்க தொடங்குகிறான் தந்தை. மகனாக இருந்தால் அவன் படித்து நிலையான வேலையில் அமரும் வரையிலும், மகளாக இருந்தால் அவளை படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கும் வரை நெஞ்சில் சுமக்கிறான்.

தாய்ப்பாசத்தில் சிறிதேனும் எதிர்பார்ப்பு மறைந்திருக்க வாய்ப்புள்ளது. மகனாக இருந்தால்... அவன் திருமணத்திற்க்கு பின்னும் தனக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாயிடம் இருக்கிறது அதன் எதிரொலி தான் மாமியார் மருமகள் சண்டை. மகளாக இருந்தால்... திருமணம் ஆன பிறகும் நான் உன்னை செல்லமாக அப்படி வள்ர்த்தேன், இப்படி வளர்த்தேன் என்று சொல்லியே தனக்கு முக்கியத்துவம் தருமாரு செய்வது இதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம். ஆனால் தந்தையின் பாசம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. மகனோ, மகளோ இந்த சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையோடும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கம் அதற்க்கான உழைப்பு மற்றும் வழிகாட்டல் இவை தான் தந்தை பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதனால் தான் தந்தையின் பாசம் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை பேசப்படுவதும் இல்லை.

ஒர் ஆண் தன் குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் வைத்திருக்கும் பாசம் அவனது பேச்சில் வெளிப்படுவதில்லை அது வெளிப்படும் விதமே வேறு. ஆண் தன் குடும்பதிற்க்காகவும், பிள்ளையின் படிப்பிற்க்காகவும் எத்தனையோ அவமானங்களை வேலை செய்யும் இடங்களில் தாங்கி கொண்டு வேலை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். கணவன் சாதாரணமாக ஏதாவது திட்டினால் கூட சில பெண்கள் முகத்தை தூக்கி வைத்து கொள்வார்கள் அல்லது அம்மா வீட்டிற்கு சென்று விடுவார்கள் ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஆண்கள் எத்தனையோ திட்டுகளை தாங்கி கொண்டும் உயர் அதிகாரிகளுக்கு பயந்து கொண்டும் வேலை செய்கிறார்கள் என்பது சக ஆண்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. தன்னை விட வயதில் குறைந்த முதலாளியோ அல்லது உயர் அதிகாரியோ காரணமில்லாமல் திட்டும் திட்டுக்களையும் பொறுத்து கொள்கிறானே யாருக்காக...தனி மனிதனாக இருந்தால்.. “போய்யா நீயும் உன் வேலையும்” என்று வந்து விடுவான் ஆனால்...தன்னை நம்பி குடும்பம், பிள்ளை இருக்கிறதே என்று நினைத்து எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருக்கிறானே அது பாசத்தின் வெளிப்பாடுதான்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரம் அவர்கள் இருவருக்குமே அது புரியாமல் இருக்கும் நிலையும் உண்டு. ஆனால் சில இக்கட்டான நேரங்களில்... என் மகன் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது என்று தந்தையும், என் தந்தை அருகில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மகனும் நினைக்கும் போது சிந்தும் ஒரு துளி கண்ணீர் மூலமாக அந்த பாசம் வெளிப்படும்.

தாய்ப்பாசம் கரையோர கடலலை போல் ஆர்ப்பரிக்கும். தந்தையின் பாசமோ நடுக்கடலை போல் அமைதியானது ஆனால் ஆழமானது.

(ஏதோ மனதில் பட்டதை எழுதிவிட்டேன். அம்மா செல்லங்கள் எத்தனை பேர் என்னை திட்டுவார்களோ...)

Monday, March 8, 2010

பொறுப்புள்ள அப்பா“டேய்....வாயில விரல வச்சி சூப்பாதன்னு எத்தனை தடவை சொல்றது....வாயில இருந்து விரல எடுடா


“ஏங்க கோவப்படறீங்க...இப்பதானே மூனு வயுசு ஆகுது போகப்போக சரியாயிடும்


“அடியே....விரல் சூப்பினான்னா பல்லு எடுத்தாப்போல வளரும் அப்புறம் வரப்போற மருமகளுக்கு நான் தானே பதில் சொல்லனும்


“என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலியே


“இவனுக்கு கல்யாணம் ஆச்சின்னா வரப்போற என் மருமக என்னை பாத்து கேட்கமாட்டாளா?


“என்ன கேட்பா


“ஏன் மாமா...இவருக்குத்தான் சின்ன வயசுலே விரல் சூப்புற பழக்கம் இருந்ததே நீங்க அந்த பழக்கத்தை நிறுத்தியிருக்க கூடாதா...அதால எனக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க....முத்தா கொடுத்தா பல்லு குத்துது அப்படின்னு சொன்னா நான் என்ன பதில் சொல்றது


“சீப்போங்க...உங்களுக்கு கொஞசம் கூட விவஸ்த்தை கிடையாது


Friday, March 5, 2010

சந்நியாசம்

நிறைய பேர் இப்படித்தான் பொலம்புறாங்க

"மனசே சரியில்லைங்க.... நாடு போற போக்கை பார்த்தா பேசாமே இல்லறத்தை விட்டுட்டு சந்நியாசம் போயிடலாம்னு தோனுது".